இனி தமிழக சிறைகளில் சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் நிறைவேற்றப்படக்கூடாது என தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இது, சமூக நெறிகளுக்காக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
பல நூற்றாண்டுகளை கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டியும், சமூகத்தில் சாதி என்ற பகைமை இன்னும் அடியொற்றி இருக்கிறது என்பது திகைக்க வைக்கும் விஷயம். பள்ளி, கோவில், வேலைவாய்ப்பு, கல்வி மட்டுமின்றி, சிறைச்சாலைகளிலும் இந்த தீண்டாமை பாசம் நீங்கவில்லை என்பதற்கான பல சான்றுகள் உள்ளன.
2020 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா சிறைகளில் சாதி பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, 2024-ல் அவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு 14 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, சாதி பாகுபாடு காட்டக் கூடாது என உள்துறை அமைச்சகத்தின் வழியாக அறிவுறுத்தியது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு சிறை விதிகளில் மாற்றம் செய்து, சாதி விவரங்களை கைதியிடம் கேட்கக்கூடாது, சாதி அடிப்படையில் பணிகள் ஒதுக்கக் கூடாது, சாதி தொடர்பான பதிவுகள் வைத்திருக்கக்கூடாது என தீர்மானித்துள்ளது. இது, சிறைச்சாலைகளில் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
சமூகநீதிக்காக நடைபெற்ற இந்த முன்னேற்றத்தை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.