பாரம்பரிய நெல் வகைகளை மீளுயிர்ப்பிக்கும் நோக்குடன் செனார்டு தொண்டு நிறுவனம் மற்றும் டைம் டிரஸ்ட் இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் விதை பகிர்வு கூட்டம் நிலக்கோட்டை வேளாண்மை அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் டைம் அறக்கட்டளை தலைவர் முருகேசன் வரவேற்புரையாற்றி, பாரம்பரிய நெல் வகைகளின் பாதுகாப்பு இயக்கத்துக்கு மக்கள், விவசாயிகள் அளிக்கும் ஆதரவையே இந்த நிகழ்ச்சி பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
விழாவிற்கு தலைமை வகித்த வத்தலகுண்டு செனார்டுட் நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி “இன்றைய உணவுப் பழக்கவழக்க மாற்றமே பல நோய்களின் காரணம். உடல் சக்தியை அதிகரிக்கவும், உணவில் நன்மை பெறவும் பாரம்பரிய நெல் மற்றும் தானியங்கள் அவசியம். நம்மை நாம் காப்பதற்கும், மண்ணை காப்பதற்கும் இயற்கை விவசாயம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்” என சிறப்புரை நிகழ்த்தினார்.
நிலக்கோட்டை வேளாண் துணை இயக்குநர் உமா, கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநிலங்களை வழங்கி, “இயற்கை விவசாய முறைக்கு மாறுவது காலத்தின் தேவை. நிலக்கோட்டை சுற்றுவட்டார விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் சிறுதானியங்களை அதிகரித்துப் பயிரிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
சித்தையன் கோட்டையைச் சேர்ந்த பாரம்பரிய நெல் விவசாயி அப்துல் ரகுமான், பாரம்பரிய நெல் விதைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், அவற்றின் நீண்டகால நன்மைகள், விதைத் தேர்வு முதல் உற்பத்தி வரை உள்ள தொழில்நுட்பங்கள் போன்றவற்றை விளக்கினார். தாவரவியாளர் தங்கப்பாண்டி (செனார்டு நிறுவனம்) நிறுவனம் விவசாயிகளுக்கான பயிற்சி, விழிப்புணர்வு, விதை சேகரிப்பு திட்டங்கள் மற்றும் நிலையான விவசாயத்திற்கான முயற்சிகளை விவரித்து பேசினார்.
வேளாண் அலுவலர் ஹேமலதா, இயற்கை உரங்கள், அவற்றின் தயாரிப்பு முறைகள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்து, “பாரம்பரிய நெல் உற்பத்திக்கு இயற்கை உரம் முக்கியமான துணை. இது மண்ணின் வளத்தைக் காப்பதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது” என்றார். விழாவின் நிறைவில் இயற்கை விவசாயி எத்திலுடை சேர்ந்த சேகர் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, விளாம்பட்டி, எத்திலோடு, கொடைரோடு, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டது.
இந்த விழா, மண், உணவு, உடல்நலம் என்ற மூன்றின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க நோக்கமாய் பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முக்கியக் கட்டமாக அமைந்தது.
















