நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திங்களன்று நாடாளுமன்றத்தில் வருமான வரி (எண். 2) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார். 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை முழுமையாக மாற்றும் நோக்கத்துடன், வரிச் சட்டங்களை எளிமைப்படுத்தும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டு, தேர்வுக் குழுவின் மறுஆய்வுக்குப் பிறகு இருந்த பழைய வரைவு ஆகஸ்ட் 8ஆம் தேதி அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது. புதிய பதிப்பில், தேர்வுக் குழுவின் 285க்கும் மேற்பட்ட பரிந்துரைகளும், பல்வேறு பங்குதாரர்களின் கருத்துகளும் இணைக்கப்பட்டுள்ளன.
நான்கு மாத விரிவான ஆய்வுக்குப் பிறகு, குழு தனது 4,500 பக்க அறிக்கையில் பல முக்கியமான மாற்றங்களை பரிந்துரைத்தது. அவற்றில் சில:
- தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தாலும், வரி திருப்பிப்பெறும் உரிமை வழங்கப்படும்.
- நிறுவனங்களுக்கு இடையேயான ஈவுத்தொகையில் ரூ.80 லட்சம் வரை விலக்கு.
- வரி பொறுப்பு இல்லாதவர்களுக்கு முன்கூட்டியே NIL-TDS சான்றிதழ் பெறும் வசதி.
- காலியாக உள்ள வீடுகளுக்கு ‘கருத்துக் வாடகை’ வரி நீக்கம்.
- வீட்டுச் சொத்து கழிப்பில் தெளிவு – நகராட்சி வரி கழித்த பிறகு 30% நிலையான விலக்கு மற்றும் வாடகை வீட்டின் வட்டி விலக்கு பொருந்தும்.
- PF திரும்பப் பெறுதல், முன்கூட்டியே தீர்ப்பளிப்பு கட்டணம் மற்றும் அபராதம் தொடர்பான விதிகளில் தெளிவுபடுத்தல்.
புதிய மசோதா Vs பழைய மசோதா :
புதிய மசோதா 536 பிரிவுகள் மற்றும் 16 அட்டவணைகளில் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய சட்டம் பல தசாப்தங்களாக அமலில் இருந்ததாலும், அதன் மொழி பொதுவான வரி செலுத்துவோருக்கு சிக்கலானதாகக் கருதப்பட்டது. இப்போது, ‘முந்தைய ஆண்டு’ மற்றும் ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்பவற்றுக்கு பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற ஒருங்கிணைந்த சொல்லாக்கம் பயன்படுத்தப்படும்.
மொழி எளிமைப்படுத்தப்பட்டதால், சாதாரண வரி செலுத்துவோருக்கும் புரிதல் எளிதாக இருக்கும். தேவையற்ற மற்றும் முரண்பாடான விதிகள் நீக்கப்பட்டு, வழக்குகளை குறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் யுகத்திற்கேற்ப விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரங்கள், முந்தையதை விட அதிகமாக மத்திய நேரடி வரி வாரியத்துக்கு (CBDT) வழங்கப்பட்டுள்ளன.

















