கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருது – கடும் கண்டனம் வெளியிட்ட முதல்வர் பினராயி விஜயன் !

“சங்க பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறதா?” – பினராயி கேள்வி

2023-ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சர்ச்சைக்குரிய இந்தித் திரைப்படமான தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை இயக்கிய சுதிப்தோ சென்வுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரசாந்தனு மோகாபத்ராவுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புக்கு எதிராக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

“கேரளாவின் நல்ல பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை பரப்பும் வகுப்புவாதப் படம் ஒன்றுக்கு விருது வழங்குவது மிகவும் கவலைக்கிடைக்கிறது. இது, சங்க் பரிவாரத்தின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்படுவதை போல் தெரிகிறது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் இந்த முடிவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.”

மேலும், இவ்விருதுகள் அறிவிக்கப்பட்ட பட்டியலில் ‘12த் ஃபெயில்’ சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. நடிகை ஊர்வசியும் உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை பெற்றுள்ளார். ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று பிரிவுகளில் விருதுகள் பெற்றுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பையும், தடைகளையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version