நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரனின் பகிரங்க கொலை மிரட்டல் வீடியோவால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாகத் தடம் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில், மாவட்ட அளவிலான உட்கட்சிப் பூசல் தற்போது வன்முறைப் பாதையை நோக்கித் திரும்பியுள்ளது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் சுகுமாரன், தனது கட்சி நிர்வாகிகளையே ஒருமையில் பேசி, மிகக் கொடூரமான முறையில் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன. நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காகக் கட்சித் தலைவர் விஜய் வருகை தந்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது கட்சியின் நற்பெயருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி குறித்துக் கூறப்படுவதாவது: கட்சித் தலைவர் விஜய்யின் நாகை வருகை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காகச் செய்யப்பட்ட செலவு கணக்குகளை மாவட்டச் செயலாளர் சுகுமாரன், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளிடம் முறையாகக் காட்டவில்லை என்று புகார் எழுந்தது. குறிப்பாக, திருமருகல் ஒன்றியக் கட்சி நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர் சுகுமாரனுக்கும் இடையே இந்த நிதி விவகாரத்தில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனை அறிந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நேரில் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சமாதானம் நீடிக்கவில்லை என்பது தற்போது வெளியாகியுள்ள வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.

கணக்குக் குறித்துக் கேட்பதற்காகச் சில நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் சுகுமாரனை நேரில் சந்திக்க நாகப்பட்டினம் சென்றுள்ளனர். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுகுமாரன் மற்றும் அவரது மகன் ரொனால்டோ ஆகியோர், சக கட்சி நிர்வாகிகளையே பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். “பொதுச்செயலாளரிடம் புகார் அளித்தால் உன்னைக் கொலை செய்து, தலையை வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன்” என்றும், “2000 பேருடன் உங்கள் ஊருக்குள் நுழைந்து கால்களை வெட்டுவேன்” என்றும் சுகுமாரன் ஆவேசமாக முழங்கியுள்ளார். மேலும், தேர்தல் முடிந்த பிறகு கட்சி நிர்வாகி அலெக்ஸ் என்பவரின் கால்களை வெட்டுவேன் எனக் கூறி, ஒரு நிர்வாகியைக் கீழே தள்ளிவிட்டுத் தாக்கிய காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. “எனக்கு இந்தப் பதவி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை” எனக் கூறிக்கொண்டே தகாத வார்த்தைகளால் நிர்வாகிகளை அவர் அர்ச்சித்துள்ளார்.

இந்த வன்முறைப் பேச்சில் சுகுமாரனின் மகன் ரொனால்டோவும் இணைந்துகொண்டு, “எனது தந்தைக்கு ஒன்று என்றால் சும்மா இருக்க மாட்டேன், அனைவரையும் கொலை செய்து கல்லைக்கட்டி கடலில் இறக்கிவிடுவேன்” எனப் சினிமா பாணியில் மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பில் இருப்பவரே, தனது சொந்தக் கட்சித் தொண்டர்களை இவ்வளவு கொடூரமாக மிரட்டியிருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது கட்சித் தலைமைக்கும், காவல்துறையினரின் பார்வைக்கும் சென்றுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர் சுகுமாரன் மீது கட்சித் தலைமை என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தொண்டர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

Exit mobile version