மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60-வது வயதை முன்னிட்டு மணிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பத்து நாட்கள் மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாணவ மாணவிகள் பங்கேற்ற மணிவிழா மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. ஆதீன மடத்தின் நுழைவாயில் முன்பு இருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 பள்ளிகளில் இருந்து 1100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆதீனத்திலிருந்து மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் பள்ளி வரை 5 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

















