சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மதராஸி’ திரைப்படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நடிகர்களின் இமேஜ் குறித்தும், தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
ரஜினி – எம்ஜிஆர் – விஜய் இமேஜ்
ஒரு நேர்காணலில், “சிவகார்த்திகேயனை, விஜயாக மாற்ற வேண்டும் என நினைத்ததுண்டா?” என கேட்கப்பட்டபோது, முருகதாஸ்,
“ஒருவரைப் போல இன்னொருவர் வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது. எம்ஜிஆரின் இமேஜ் வேறு, ரஜினி சாரின் இமேஜ் வேறு. எம்ஜிஆர் சாரின் படங்களில் சிகரெட், மது இல்லாது. ஆனால் ரஜினி சாரின் பாணி அதற்கு மாறாக இருந்தது. ஆரம்பத்தில் விஜய் சார், ரஜினி பாணியை பின்பற்றினாலும், பின்னர் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டார். அதுபோலவே சிவகார்த்திகேயனும் தன்னுடைய பாதையை அமைத்துக் கொண்டுள்ளார். இவர்களில் மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை – மூவரையும் குழந்தைகள் விரும்புகிறார்கள்.” எனக் கூறினார்.
பட வெற்றி – தோல்வி அனுபவம்
படம் வெற்றி அல்லது தோல்வி அடையும் போது என்ன சிந்திப்பீர்கள் எனக் கேட்கப்பட்டதில், “துப்பாக்கி படம் எடுக்கும்போது, முதல் பாதி கதையோடு மட்டுமே ஷூட்டிங் தொடங்கினேன். படப்பிடிப்பின் போது கதையை யோசித்து எடுத்தேன். அதே போல கத்தி படத்திற்கும். இரண்டும் வெற்றி பெற்றதால், கதை எளிதாக வருகிறது என நினைத்துவிட்டேன். ஆனால் சில படங்கள் தோல்வியடைந்தபோது, இது சரியான முறை இல்லை என்பதை உணர்ந்தேன்.” எனத் தெரிவித்தார்.
குடும்ப விழாவில் டான்ஸ்
சமீபத்தில் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் ஆடிய டான்ஸ் பற்றி அவர், “எங்கள் வீட்டில் பெரிய நிகழ்ச்சி நடந்து நாளாகிவிட்டது என்பதால், மகளின் விழாவை சிறப்பாக நடத்தினோம். டான்ஸ் ஆடச் சொன்னது கடைசி நேரத்தில் தான். உறவினர்கள் முன்பாக ஆடியதுதான், அது இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
சல்மான் கானுடன் பணிபுரிந்த அனுபவம்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி முருகதாஸ்,
“நாம் காலை நேரத்தில் வேலை செய்வதற்கு பழகியவர்கள். ஆனால் சல்மான் இரவு 8 மணிக்கே ஷூட்டுக்கு வருவார். பகல் காட்சி வேண்டுமென்றால், இரவில் லைட் போட்டு எடுக்க வேண்டிய நிலை. ஹீரோ சுறுசுறுப்பாக இருந்தாலும், மற்ற நடிகர்கள் சோர்வடைவார்கள். அதனால் காட்சிகளின் தரம் பாதிக்கப்படும்.” என கூறினார்.
‘சிக்கந்தர்’ பட தோல்வி
’சிக்கந்தர்’ திரைப்படம் குறித்து பேசும்போது அவர், “அந்தக் கதையின் அடிப்படை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஒரு ராஜா, தன் மனைவியை வாழும் காலத்தில் புரிந்துகொள்ளவில்லை. அவள் இறந்த பின், அவளது உடல் உறுப்புகளை கொடையாகப் பெறுவோருக்கு உதவ வேண்டும் என ஹீரோ நினைக்கிறான். ஒரு ஊர் முழுவதும் அதற்கு துணை நிற்கிறது. ஆனால் அதை சரிவர வடிவமைக்க முடியவில்லை. அதற்கு நான் மட்டும் காரணமில்லை.” என தெரிவித்துள்ளார்.