3 ஆண்டுகள் தலைமறைவுக்கு பின் ஆஜராகிய மீரா மிதுன் – பிடிவாரண்ட் ரத்து !

பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதைத் தொடர்ந்து, அவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

2021 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பட்டியலினத்தவரை அவதூறாக குறிப்பிட்டதாக மீரா மிதுன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு சமூக அமைப்புகள் காவல்துறையில் மனு அளித்தன.

இந்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் ஜாமினில் வெளியே வந்தார். ஆனால், தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகாததால், 2022 ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

அவர் டெல்லியில் தங்கியிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீசார் கைது செய்து ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், மீரா மிதுன் சமீபத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நேரில் ஆஜரானார்.

அப்போது, அவர் உடல்நல பிரச்சனை காரணமாக மனிதாபிமான அடிப்படையில் பிடிவாரண்டை ரத்து செய்ய காவல்துறைக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என கூறப்பட்டது. இதனை நீதிபதி ஏற்று, மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்து, வழக்கை வரும் நவம்பர் 6 ஆம் தேதிக்கு விசாரணைக்காக ஒத்திவைத்தார்.

Exit mobile version