இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீண்டு வர முயன்றது. தொடர் தொடக்கப்போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியதால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்திய அணியின் தொடக்க ஜோடியாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அபிஷேக் 19 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் எலிஷ் பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சுப்மன் கிலுடன் சேர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்தார்.
இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் தொடங்கியது. சுப்மன் கில் 37 ரன்களுடன், சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மழை தீவிரமாக பெய்ததால் மைதானம் ஈரப்பதமாகி, ஆட்டத்தைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் நடுவர்கள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், மழை மாயம் காரணமாக ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.
















