அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், கபடி வீரர்களின் போராட்டத்தையும், அவர்களின் உழைப்பையும் உணர்ச்சியோடு பதிவு செய்துள்ளது.
திரைப்படத்தை பார்த்த பிறகு, அதைப் பற்றி மணத்தி கணேசன் தனது உணர்வுகளை பகிர்ந்தபோது, அவர் கூறியதாவது :
“இந்தப் படத்தை பார்க்க சென்னை வரச் சொன்னார்கள். கபடியில் என் உழைப்பை மாரி செல்வராஜ் மிகவும் நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். துருவும் அதற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடன் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.”
“முன்பு சினிமா எளிதானது என நினைத்தேன். ஆனால் இது ஸ்போர்ட்ஸை விடவும் கடினமான துறையாக இருக்கிறது என்பதைக் கண்டேன். 1994-ல் நான் விளையாடி வென்றபோது இருந்த மகிழ்ச்சியை, என் தம்பி மாரி செல்வராஜ் இப்போது திரையில் மீண்டும் அனுபவிக்க வைத்துள்ளார். அவர் என் உயிரிலேயே கலந்தவர்.”
துருவின் உழைப்பையும் அவர் பாராட்டி, “ஒருநாளும் சோர்வடையவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக எனது பயிற்சியில் கலந்து கடுமையாக உழைத்தார்,” என கூறினார்.
இதே நேரத்தில் தமிழ்நாட்டின் கபடி வளர்ச்சியைப் பற்றியும் அவர் பேசினார் :
“இப்போது மேட் கோர்ட் வந்ததால் விளையாட்டு தரம் உயர்ந்துள்ளது. ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தெற்குப் பகுதிகளில் உள்ள திறமையான வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.
மணத்தி கணேசனின் உண்மை வாழ்க்கை போராட்டத்தை திரையில் உணர்ச்சியுடன் காட்சிப்படுத்திய மாரி செல்வராஜுக்கும், துருவுக்கும் தற்போது ரசிகர்கள் மற்றும் விளையாட்டு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.
 
			















