மலையாள சினிமாவின் மெகா ஸ்டாராகப் போற்றப்படும் நடிகர் மம்மூட்டி, உடல்நலக் காரணங்களால் சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
73 வயதிலும் இளமையை பேணிய முகம், உற்சாகமான நடிப்பு என தொடர்ந்து புதிய கதைகளைத் தேர்வு செய்து வருகிறார் மம்மூட்டி. மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரின் தற்போதைய செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவலைக்கிடம் ஏற்படுத்தியுள்ளன.
பொதுவாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யும் மம்மூட்டி, சமீபமாக எந்த புதிய படத்திலும் கமிட் ஆகவில்லை என்பது தொழில்துறை வட்டாரங்களில் பரவிய தகவல். சில வாரங்களாகவே அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சில காலம் ஓய்வெடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த ‘டாமினிக் தி லேடீஸ் பர்ஸ்’ மற்றும் ‘பசூகா’ ஆகிய திரைப்படங்களில் மம்மூட்டி நடித்திருந்தார். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தன. அந்தப் படங்கள் வெளியானபோது மம்மூட்டியின் உடல்நிலை குறித்த கோளாறுகள் பற்றியும் செய்திகள் பரவின.
அதே நேரத்தில், “மம்மூட்டிக்கு புற்றுநோய் இருப்பதாகப் பரவும் செய்திகள் உண்மை அல்ல” என்று கேரள நடிகர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும், அவரது உடல்நிலை குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், மம்மூட்டி விரைவில் உடல்நலத்துடன் திரும்பி வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.