மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

மலையாள சினிமாவின் முக்கியமான முகங்களில் ஒருவராக விளங்கிய நடிகர், இயக்குநர், வசனகர்த்தா சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு மலையாள திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சீனிவாசன், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் தனித்த அடையாளம் பெற்றவர். தமிழில் லேசா லேசா, இரட்டை சுழி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அவர் அறிமுகமானார்.

சிந்தா விஸ்டயாய ஷியாமலா திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்ற சீனிவாசன், தனது திரைப்படப் பயணத்தில் ஒரு தேசிய விருதுடன் கூடுதலாக 6 கேரள மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.


யார் இந்த சீனிவாசன்?
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி அருகேயுள்ள பட்டியத்தில் பிறந்த சீனிவாசன், மலையாள சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவராக உயர்ந்தார். நடிப்பைத் தாண்டி தயாரிப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல இயக்குநரும் நடிகருமான வினீத் சீனிவாசன் இவரது மூத்த மகன். தயான் சீனிவாசன் மற்றொரு மகன். மனைவி விமலாவுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version