சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கருத்துக்கு நடிகர் சல்மான் கான் பதிலடி கொடுத்துள்ளார்.
சல்மான் கான் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான சிக்கந்தர் படம், ரம்ஜான் ரிலீஸாக கடந்த மார்ச் 30ம் தேதி வெளியானது. ஆனால் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இதற்கான காரணங்களை விளக்கும் வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் முருகதாஸ், “ஒரு பெரிய நட்சத்திரத்துடன் வேலை செய்வது சுலபமல்ல. சல்மான் கான் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார். அதனால் பகல் காட்சிகளையும் இரவில்தான் எடுக்க வேண்டியிருந்தது. சிறு குழந்தைகள் நடித்த காட்சிகளையும் அதிகாலை நேரங்களில் படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பல சிரமங்கள் ஏற்பட்டன,” என தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலாக, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் ஹிந்தி சீசன் 19 நிகழ்ச்சியில் சல்மான் கான் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“நான் நடித்த எந்தப் படத்திற்காகவும் வருத்தப்படவில்லை. சிக்கந்தர் பற்றியும் அப்படித்தான். அந்தப் படத்தின் கதை நன்றாக இருந்தது. நான் இரவு 9 மணிக்குத்தான் வந்தேன், ஏனென்றால் அப்போது என் விலா எலும்பு உடைந்திருந்தது. முருகதாஸ் கூறுவது உண்மைதான், ஆனால் பின்னணி காரணங்கள் வேறாக இருந்தது.
அவர் மதராசி என்ற படத்தையும் இயக்கினார் அல்லவா ? அந்தப் படத்தின் ஹீரோ காலை 6 மணிக்கே செட்டில் இருப்பார். அதுதான் பெரிய படம்… சமீபத்தில் வெளிவந்த அந்த படம், சிக்கந்தரை விட பெரிய ப்ளாக்பஸ்டர்!” எனச் சல்மான் கூறியுள்ளார்.
சல்மான் கான் பேச்சு முழுவதும் கிண்டலான தொனியில் இருந்ததோடு, முருகதாஸ் மீது நகைச்சுவை கலந்த விமர்சனமாக இருந்தது. தற்போது இது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறி வருகிறது.