இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி 2’ திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் இடையீட்டு மனுவை விசாரித்து இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த ‘கும்கி’ பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘கும்கி 2’ படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். புதிய நடிகர் மதி கதாநாயகனாகவும், அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியீடு பெற இருந்த நிலையில், சினிமா நிதியாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், தம்மிடம் 2018ஆம் ஆண்டு பெற்ற 1.5 கோடி ரூபாய் கடனையும் அதனுடன் வட்டியையும் இயக்குநர் பிரபு சாலமன் செலுத்தாததால், ‘கும்கி 2’ வெளிவரக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்றம் முதல் கட்டமாக இடைக்கால தடை விதித்தது.
அதற்கு எதிராக தயாரிப்பு நிறுவனமான பென் இந்தியா சார்பில் தொடரப்பட்ட மனுவில், “பிரபு சாலமன் இயக்குனர் மட்டுமே; அவர் பெற்றதாகக் கூறப்படும் கடனுக்கு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்க முடியாது. மேலும், தணிக்கை சான்றிதழ் எங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், பிரபு சாலமன் ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, ‘கும்கி 2’ வெளியீட்டுக்கான தடை நீக்கப்பட்டதாக அறிவித்தது.













