சென்னை: நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையிலான 21 கோடிக்கும் மேற்பட்ட கடன் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது. லைகாவுக்கு வட்டியுடன் தொகை செலுத்தும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மேல் முறையீட்டு பெஞ்ச் இடைக்கால தடை விதித்து, விஷால் தரப்பை 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.
விஷாலின் VFF நிறுவனத்துக்காக நிதியாளரான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸிடம் இருந்து பெறப்பட்ட 21.29 கோடி ரூபாய் கடனை, லைகா நிறுவனம் தீர்த்து வைத்தது. அந்த தொகை திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகாவுக்குச் செல்லும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கூறி, பணத்தை மீட்டளிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடி லைகா வழக்கு தொடர்ந்தது. விசாரணை நடத்திய தனி நீதிபதி, 30% வட்டியுடன் விஷால் தரப்பு தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
மேல்முறையீட்டில் கேள்விகள் :
இந்த உத்தரவுக்கு எதிராக விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ததால், வழக்கு நெடுநேரம் விவாதமானது. ஒரு தொகையை முதலில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என நீதிபதிகள் S.M. சுப்ரமணியம், முகமது ஷஃபீக் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
விஷால் தரப்பு வழக்கறிஞர், “15 கோடி கடனுக்கு 30% வட்டி விதிப்பது சட்டவிரோதம்” “வட்டி மட்டும் 40 கோடியை கடந்துவிடும்” என்று விளக்கம் அளித்தார். மேலும், விஷால் பெரிய அளவில் பணக்காரர் அல்ல என்றும் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், “அப்படியானால் திவாலானவர் என அறிவிக்க தயாரா?” என நேரடியாக கேள்வி எழுப்பியதோடு, 30% வட்டி என்பது சுரண்டல் வட்டி என கடுமையாகக் குறிப்பிடினர்.
இடைக்கால தடை – 10 கோடி டெபாசிட் உத்தரவு
விவாதங்களை கருத்தில் கொண்டு, லைகாவின் கோரிக்கையை பரிசீலித்திருந்த தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை மேல் முறையீட்டு பெஞ்ச் தற்காலிகமாக முடக்கியது. அதே நேரத்தில், விஷால் தரப்பு 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
லைகா தரப்பும் இந்த மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அடுத்த விசாரணை நான்கு வாரங்களுக்கு பிறகு நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
