சென்னை:
தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் அழைக்கப்பட வேண்டும் எனக் கட்சித் தலைவர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்திருந்தார். இந்த கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பேச்சுப் பொருளாக இருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது.
விஜய் தனது கடிதத்தில்,
த.வெ.க மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கில் தயாராக இருப்பதாகவும், அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்று பதிவு செய்திருந்தார்.
மேலும் மாநில தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் த.வெ.கக்கு இதுவரை அழைப்பு வழங்கப்படாதது, பெரிய அளவிலான வாக்காளர்களின் கருத்து பிரதிபலிப்பை மறுக்கும் நடைமுறையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த தங்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், “ஒரேயொரு எம்எல்ஏ கூட இல்லாத புதிய கட்சியை ஆலோசனைக்குக் எப்படி அழைப்பார்கள்?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துவந்தது. இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,
“தேர்தலை சந்தித்து மக்கள் அங்கீகாரம் பெற்றால்தான் தேர்தல் ஆணையம் அந்தக் கட்சியை ஆலோசனைக்குக் கூப்பிடும். இப்போதுதான் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் செயல்திறனைப் பொறுத்தே அங்கீகாரம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
விஜயின் கோரிக்கையையும், அதற்கு வெளியான அரசியல் எதிர்வினைகளையும் தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது மாநில அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்திருக்கிறது.

















