மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில், ‘நந்தன்’ திரைப்படத்தின் இயக்குனர் சரவணன், இப்படத்தையும், அதன் இயக்குனர் மாரி செல்வராஜையும் புகழ்ந்துள்ளார்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி உருவான ‘பைசன்’, சமூக வலியும் சாதிய நிழல்களும் கலந்த உண்மையான மனிதக் கதையாக வெளிவந்துள்ளது.
படத்தைப் பார்த்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சரவணன்,
“என் இரண்டாவது படப்பிடிப்பு முடிந்தபின் ‘பைசன்’ பார்த்தேன். சில நிமிடங்களிலேயே அந்தக் கதையின் ஒரு பாகமாகி விட்டேன். கிட்டானின் மூச்சு எனக்குள்ளும் ஒலித்தது. ஒரு களத்தின் முழு வாழ்க்கையையும் தத்ரூபமாகக் காட்டி, அதன் வழியே கதையைச் சொல்லிய விதம் திகைக்க வைக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“இத்தகைய படைப்புகள் போராட்டக் குரல் எழுப்பும் இயக்குனர்களால்தான் சாத்தியம். சாதிய வலியை வெளிப்படுத்தும் முன்னைய படங்களிலிருந்து மாறுபட்டதாக ‘பைசன்’ சமூகத்தின் துடிப்பை நேர்மையாக வெளிப்படுத்துகிறது. சமூகச் செய்தியை திரைப்படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுழைத்த விதம் அற்புதம். ‘முன்னேறி மேல போங்கப்பா…’ என நம்மை ஊக்கப்படுத்தும் படைப்பு இது,” என்றும் கூறியுள்ளார்.
அதிகம் பாதித்த அனுபவமாக இதைச் சுட்டிக்காட்டிய சரவணன், “இந்த படம் பார்த்த பிறகு நான் இயக்கி முடித்திருந்த என் படத்தையும் இன்னும் ஐந்து நாட்கள் கூடுதலாக எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு பொறுப்பும் போராட்டமும் கற்றுக் கொடுத்திருக்கிறது ‘பைசன்’,” என்றும் பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கம், ரஞ்சித் தயாரிப்பு, துருவ் விக்ரம் உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பு ஆகியவை சேர்ந்து உருவாகிய ‘பைசன்’, சமூக உணர்வை மீண்டும் பேச வைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

















