லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 8-ம் தேதி துவங்கி, சில மணி நேரங்களிலேயே தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஹவுஸ் புல் ஆனது.
உலகளவில் முன்பதிவு மூலமாகவே ₹50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொதுவாக ரஜினிகாந்தின் படங்களை ரிலீஸுக்கு முன்பே அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பார்ப்பது வழக்கம். அதன்படி, சமீபத்தில் ‘கூலி’ படத்தை பார்த்த அவர், “இது ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்” என மனதாரப் பாராட்டியுள்ளார். இந்த தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் உய்ந்துள்ளது.
இந்த படம், லோகேஷ் கனகராஜின் ‘எல்.சி.யு’ (Lokesh Cinematic Universe)வில் இடம்பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் இடம்பெறாது என லோகேஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், படத்தில் பல சர்ப்ரைஸ் அம்சங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, ‘கூலி’ வசூல் சாதனை படைக்கும் என திரைவர்த்தகர்கள் நம்புகின்றனர்.
இதே நாளில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘வார் 2’ திரைப்படமும் வெளியாகிறது. இதில் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனால் ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபிஸ் போட்டி உருவாகியுள்ளது. வடமாநிலங்களில் ‘கூலி’ வசூலுக்கு இதனால் ஓரளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றாலும், ரசிகர்களின் வரவேற்பு பெற்ற படம் வசூலில் வெற்றி பெறுவது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















