சென்னை: இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி 2’ திரைப்படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’ திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே இயக்குனர் பிரபு சாலமன், தற்போது ‘கும்கி 2’ படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின், பட வெளியீட்டைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 2018 ஆம் ஆண்டு 1 கோடி 50 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிரபு சாலமன், படத்தின் வெளியீட்டுக்கு முன் வட்டி சேர்த்து பணத்தைத் திருப்பி வழங்குவதாக ஒப்பந்தம் செய்திருந்தாலும், இதுவரை 2 கோடி 50 லட்சம் ரூபாய் தொகையை செலுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ‘கும்கி 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த உத்தரவு சினிமா உலகில் கவனம் ஈர்த்துள்ளது.
