கொடைக்கானலில் உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை ஆலயத்தில் 159ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமய வேறுபாடின்றி மலைப்பகுதியில் நிலவிய கடும் குளிரினை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பிரான்சுக்கு அடுத்தபடியாக உலக புகழ் பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. குறிப்பாக கொடைக்கானலில் அனைத்து சமுதாயத்தினரும் கொண்டாடும் முக்கிய திருவிழாவாக இந்த புனித சலேத் அன்னை ஆலய திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த புனித சலேத் அன்னை திருத்தலத்தில் இன்று 159வது வருட ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இவ்விழாவில் திண்டுக்கல் மறைமாவட்ட அருட்தந்தை பிலிப் சுதாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த விழா இன்று துவங்கி 10 நாட்கள் வரை சிறப்பு ஆராதனை மற்றும் நவநாள் திருப்பலி நடைபெறும்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 தேதிகளில் தேர் பவனி நடைபெற்று இனிதே பெருவிழா முடிவடையும். இந்த பெருவிழாவிற்காக மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து சலேத் அன்னை உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி நகரின் முக்கிய வீதியான அண்ணாசாலை வழியாக ஊர்வலமாக சலேத் அன்னை ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு, வான வெடிகள் முழங்க திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.