கரூர் : தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், சம்பவ இடத்தையும் உயிரிழந்தோரின் குடும்பங்களையும் சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கரூரிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள ஏமூர் புதூருக்கு அருணா ஜெகதீசன் சென்றார். அங்கு 5 பேர் பலியாகிய நிலையில், குடும்பத்தாரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது தனது மனைவியும் 14 வயது மகளும் உயிரிழந்த துயரத்தில் மூழ்கிய சக்திவேல் கண்ணீருடன் பேசினார்.
“எங்கள் ஊரிலிருந்து தவெக நிர்வாகிகள் டெம்போ வைத்து கூட்டத்துக்குக் கூட்டிச்சென்றார்கள். என் மகளும் மனைவியும் அதில் போனார்கள். விஜய் மேடைக்கு வந்ததும் கூட்டம் அதிகரித்தது. அப்போ குழந்தை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது என் மகள்தான் தாரணிகா. விஜய் மைக்கில் அவள் பெயரைச் சொல்லியதும் நாங்கள் தேடினோம். ஆனால் அந்த நெரிசலில் என் மனைவியும் மகளும் விழுந்துவிட்டார்கள். மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்போது அவர்களை மிதித்து சென்றுவிட்டார்கள்,” என சக்திவேல் துயரத்துடன் கூறினார்.
அவரது மனைவி பிரியதர்ஷினி எம்.ஏ., பி.எட் பட்டதாரி. 14 வயதான தாரணிகா அருகிலுள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். தீவிர விஜய் ரசிகையான அவர், “விஜய்யை நேரில் பார்க்கணும்” என்ற ஆவலுடன் தாயுடன் பிரச்சாரத்துக்குச் சென்றதாகவும் சக்திவேல் தெரிவித்தார்.
சக்திவேல், தாஸ்மாக் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே 9 வயதில் உடல்நலக் குறைவால் மற்றொரு மகள் நிதிகாவை இழந்த நிலையில், தற்போது மனைவியையும் தாரணிகாவையும் இழந்த துயரம் அவரைச் சுற்றிக் கொண்டுள்ளது.
இந்த உருக்கமான நிலையை கேட்ட அருணா ஜெகதீசன், “தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்றால் அவர்கள் பத்திரமாக மீண்டும் அழைத்து வர வேண்டாமா? டெம்போவில் எத்தனை பேர் சென்றார்கள், எத்தனை பேர் திரும்பினார்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டார். மேலும், “விஜய் அறிவித்த பெயர் தெரிந்திருந்தால் குழந்தை உயிருடன் இருந்தால் நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்லியிருப்பாளே,” என்றும் அவர் கூறினார்.
துயரத்தில் உடைந்த சக்திவேல், “என் மகளுக்கும் மனைவிக்கும் நேர்ந்தது யாருக்கும் நேரக் கூடாது,” என கதறினார்.