கரூர் : கரூரில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், சிபிஐ விசாரணை கோரிய மனுக்களும் இன்று நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்பட்டன.
விசாரணையின் போது தவெக தரப்பில், “விஜய் காவல்துறையின் ஆலோசனையின்படியே கூட்டம் நடந்த இடத்திலிருந்து வெளியேறினார்” என வாதிடப்பட்டது. மறுபுறம், உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் சார்பில் “கூட்டத்தில் ரவுடிகள் நுழைந்தனர், அதுவே கலவரத்துக்கு காரணம்” என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் சிபிஐ விசாரணை அவசியம் என அவர்தரப்பு வலியுறுத்தியது.
அதே சமயம், அரசு தரப்பில் “விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்குக் காரணம்” என வாதிடப்பட்டதுடன், “இது போன்ற அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ தேவைப்படும்; உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு போதுமானது” எனவும் கூறப்பட்டது.
ரவுடிகள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்ற இரவு உடற்கூராய்வில் எந்த வித தவறும் இல்லை என்றும் அரசு விளக்கம் அளித்தது.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இரவில் பிரேதப் பரிசோதனை நடத்துவது வழக்கமான நடைமுறையே எனக் கூறினர். மேலும், “உடற்கூராய்வுக்கு எத்தனை மேசைகள் பயன்படுத்தப்பட்டன, மருத்துவ வசதிகள் எவ்வாறு இருந்தன” என்ற கேள்விகளையும் எழுப்பினர்.
இதையடுத்து, தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பை ஒத்திவைத்தது.
மேலும், பரப்புரை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வேறு வழக்குகளையும் நீதிபதிகள் எடுத்துரைத்து, “மதுரை கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஒரே நாளில் வேறு வேறு உத்தரவுகள் எப்படி வழங்கப்பட்டன?” என கேள்வியெழுப்பினர்.