பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலகமும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரைப்பை குடலில் ஏற்பட்ட ரத்தப்போக்கால் நேற்று காலமான ரோபோ சங்கர் (வயது 46) அவர்களின் உடல், சென்னை ஜெம் மருத்துவமனையில் இருந்து வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதும், உறவினர்கள், ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் துக்கத்தில் மூழ்கினர்.
நள்ளிரவில் நடிகர் தனுஷ் வந்து, சங்கரின் மகள் இந்திரஜாவை ஆறுதல் கூறினார். “கவலைப்படாதே, நான் உன்னோட இருக்கேன்” என்று சொல்லி அணைத்துக் கொண்டார். மேலும் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, என்.எஸ். பாஸ்கர், ராதாரவி, நளினி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கமலின் வருகை – கண்ணீர் மல்கிய இந்திரஜா
இன்று காலை உலகநாயகன் கமல்ஹாசன், ரோபோ சங்கரின் வீட்டிற்கு சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சங்கரின் மகள் இந்திரஜா கதறி அழுது, “அப்பா, எழுந்திருப்பா… உலகநாயகன் நம்ம வீட்டிற்கு வந்திருக்காரு. உன்ன பாக்க வந்திருக்காரு. உன் பேரனை தூக்கிட்டாருப்பா” என உருகி அழுத சம்பவம், அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
கமல்ஹாசன், சங்கரின் பேரனை தூக்கியபோது இந்திரஜா மேலும் கதறிய காட்சி அனைவரையும் உருகச் செய்தது.
திரையுலகமும் அரசியலும் இரங்கல்
ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரோபோ சங்கரின் ஆரம்பகாலத்தில் கமல்ஹாசனை பின்பற்றியே நடிப்பு உலகில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரின் பேரனுக்கு “நட்சத்திரன்” என்று பெயர் வைத்ததும் கமல்ஹாசன்தான்.