வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகித்து, யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘ஜூராசிக் வேர்ல்ட்: ரிபர்த்’ திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. வெளியாகிய சில நாட்களிலேயே இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, உலகளவில் பல கோடிகள் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயை தாண்டி, குடும்ப ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பத்துடன் செல்லத்தக்க தரமான ஆக்ஷன் மற்றும் அதிரடி அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
பிரபல பாஃப்டா விருது பெற்ற இயக்குநர் கரேத் எட்வர்ட்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜொனாதன் பெய்லி, ஆஸ்கர் வின்னர் மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன்’ படத்திற்குப் பிறகு நடைபெறும் இந்தப் புதிய பகுதியில், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடத்தில் டைனோசர்கள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. அவற்றில் மூன்று பிரம்மாண்ட டைனோசர்கள், மனித இனத்திற்கு பயனளிக்கக்கூடிய மருந்துக்கான மரபணுக் குறியீட்டை தங்களிடத்தில் வைத்திருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாக ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்துள்ளார். அவருடன் தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லாமிஸாக ஜொனாதன் பெய்லி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் அந்த மரபணு குறியீட்டை பாதுகாப்பதற்காக ஒரு சிறப்பு குழுவை வழிநடத்துகிறார்கள்.
ஒரு குடும்பம், எதிர்பாராதவிதமாக அந்த டைனோசர் தீவில் சிக்கிக்கொள்கிறது. அங்கு அவர்கள், பல தசாப்தங்களாக உலகம் அறியாமல் இருந்த ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இப்படத்தின் கதைக்களம் அதனைச் சுற்றித்தான் நகர்கிறது.