ஜபல்பூர் : மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய துப்பலா வெங்கட ரமணா, ஓய்வு பெற்றதையொட்டி நடைபெற்ற பிரியாவிடை விழாவில், தனக்குக் காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டதைக் குறித்து வேதனையுடன் உரையாற்றினார். அவரது உரை, நிகழ்வில் கலந்துகொண்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் உள்ளங்களை கலங்கவைத்தது.
“எந்த ஒரு காரணமும் இல்லாமல், எனது விருப்பம் கேட்கப்படாமலே ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டேன். என் மனைவியின் சிகிச்சைக்காக கர்நாடகத்தை விரும்பியிருந்தேன். ஆனால், அதனை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்கவே இல்லை. இது ஒருவிதமான பாதிப்பையே ஏற்படுத்தியது. அந்த உத்தரவு எனைத் துன்புறுத்தவே பிறப்பிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது,” என்று நெஞ்சமுடைந்து கூறினார்.
“இது கடவுளால் கூட மன்னிக்கப்பட முடியாது. அந்த தீர்மானத்திற்கு பின்னால் இருந்தவர்கள் நிச்சயமாக வேறு வகையில் பாதிக்கப்படுவர். எனினும், அந்த சாபம் எனக்கு ஒரு வரமாகவே மாறியது. ஜபல்பூர் மற்றும் இந்தூரில் நல்லவர்களையும், ஆதரவையும் பெற்றேன். நான் மனமுடைந்திருந்தாலும், நீதிக்கான என் பணி தொடர்ந்தது,” என்றார்.
தொடர்ந்து, நீதித்துறையில் எதிர்கொண்ட சவால்கள், அனுபவங்கள், சதி முயற்சிகள் அனைத்தும் உண்மையை உறுதியாக நம்ப வைத்ததாகவும், தனது செயல்பாடுகள் நீதிக்கான பங்களிப்புகளாகவே இருந்ததாகவும் குறிப்பிட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின், “ஒரு மனிதனின் இறுதி அளவுகோல், சவால்கள் மற்றும் சர்ச்சைகளின் நேரத்தில் அவர் எங்கு நிற்கிறார் என்பதே” என்ற மேற்கோளையும் அவர் குறிப்பிட்டார்.
கடைசியாக, “நான் சிறந்த நீதிபதி என சொல்லமாட்டேன். ஆனால், நீதியின் இறுதிக் குறிக்கோள் – சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதே என்பதை நான் என்றும் நம்பி செயல்பட்டேன்” என்று உரையை முடித்தார்.
இடமாற்றம் தொடர்பான அவரது மறுபரிசீலனை கோரிக்கையை கொலீஜியம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.