காமராஜர் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்னரே பள்ளி, வங்கி மற்றும் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறோம். காமராஜர் குறித்தும், நாடார் சமூகம் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த முக்தாரை கைது செய்ய தவறினால் தேர்தலில் உரிய முடிவெடுப்போம்:- மயிலாடுதுறையில் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பேட்டி:-
மயிலாடுதுறையில் நாடார் மகாஜன சங்க டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் நாடார் உறவின்முறை பரிபாலன சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நாடார் சமுகம் குறித்தும், காமராஜர் குறித்தும் முக்தார் என்பவர் சமுக ஊடகத்தில் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். அவர்மீது மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம். அதை தமிழக அரசு விசாரித்து முக்தார்;மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். காமராஜர் ஆட்சியில் அமர்ந்ததற்கு முன்னரே நாடார் சமூகத்தினர் பள்ளிக்கூடங்கள், வங்கி மற்றும் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறோம். தேசிய தலைவராக வளர்ந்த காமராஜரை கண்டு நாங்கள் பெருமிதமடைந்தோம். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் நாடார்; சமுதாயத்துக்காக எவ்வித உதவியும் செய்யவில்லை. உழைப்பால் முன்னேறிய சமுதாயத்தையும், ஒரு தலைவரையும் அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலுக்கு முன்பு இந்த சமூகம் ஒரு நல்ல முடிவை எடுக்கும். இதற்கு முன்னரே, திமுகவில் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா எம்.பி., ஆகியோர் காமராஜர் குறித்து விமர்சித்தார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோல் அவதூறு பரப்புவது தொடர்ந்திருக்காது. பனை சொசைட்டி இருந்தபோது பனை பொருள்கள் உற்பத்தி நன்றாக இருந்தது. காதி பவனில் இணைத்ததால் பனைவெல்லம், கருப்பட்டி உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. பனை பொருள்கள் உற்பத்தியை தடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் முயற்சியாக நினைக்கிறோம். பதனீரையும் பாக்கெட்டில் விற்பனை செய்யும் தொழிற்சாலை உருவாக்கினால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பனைவெல்ல சொசைட்டிகளை உருவாக்கினால் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரித்து கொடுக்க பனை தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.
















