துபாய் : ஆசியக் கோப்பை லீக்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, வெற்றி-தோல்வியைத் தாண்டியும் பல விவாதங்களை கிளப்பியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில், இந்தப் போட்டி நடந்தது. டாஸ் நிகழ்ச்சியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் பார்வையையே தவிர்த்ததோடு, கை குலுக்காமலும் சென்றது கவனத்தை ஈர்த்தது.
மேலும், தேசிய கீத நிகழ்ச்சியிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தேசிய கீதம் ஒலிக்குமென அறிவிக்கப்பட்ட சமயம், தவறுதலாக “ஜிலேபி பேபி” பாடல் சுமார் 6 விநாடிகள் ஒலித்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் திகைப்பில் நின்றனர். பின்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 127 ரன்களில் ஆல்அவுட் ஆனது. எளிதான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, 15.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பில் 131 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் ஆட்டம் முடிந்ததும் வழக்கம்போல் கைகுலுக்காத இந்திய வீரர்களின் நடவடிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் சில நொடிகள் காத்திருந்தபோதும், இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொண்டே நேராக டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்றனர்.
போட்டி முடிந்தபின் பேசிய சூர்யகுமார் யாதவ், “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களின் பக்கம் எப்போதும் நாங்கள் நிற்போம். இந்த வெற்றியை இந்திய பாதுகாப்புப் படைக்கு அர்ப்பணிக்கிறோம்” எனக் கூறினார்.
இதையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனம் உடைந்து கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது: “இந்தியாவின் விளையாட்டு நன்றாக இருந்தது. ஆனால் இது ஒரு கிரிக்கெட் போட்டி — அரசியலாக்க வேண்டாம். கை குலுக்காமை வருத்தமாக உள்ளது. சண்டைகள் நடக்கும், ஆனால் அதை மறந்து முன்னேற வேண்டும். கிரிக்கெட் என்பது பெருந்தன்மையை வெளிப்படுத்தும் மேடை. கைகுலுக்கி விளையாட்டின் மரியாதையை காக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இச்சம்பவம் தற்போது இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
















