துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி, சமீபகாலமாக அரசியல், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது சினிமா துறையிலும் களமிறங்கியுள்ளார்.
லண்டனில் நிதி நிர்வாகத்தில் பட்டம் பெற்ற இன்பநிதிக்கு, திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கலைஞர் டிவி வளாகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு, நிதி நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்நேரம் முதல் அவர் தினமும் அலுவலகத்துக்கு வருகை தந்து ஆலோசனைகள் நடத்தி வந்தார்.
இதனிடையே, சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள அவர், தற்போது சென்னை அடிப்படையிலான ஒரு கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் நடிப்பு கற்றுக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியிருந்தது.
இதனையடுத்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இன்பநிதி பொறுப்பேற்றுள்ளார். அந்த நிறுவனத்தின் விநியோகத்துறையில் தனது முதல் முயற்சியாக, தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து, இயக்குநர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டு, “இட்லி கடை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்த புதிய பயணத்திற்கு இன்பநிதிக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
 
			














