மயிலாடுதுறை அருகே இலுப்பூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் ; ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பழமை மாறாமல் புணரமைக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் அருகில் யாகசாலை கொட்டகை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் முதல் கால யாகசால பூஜை தொடங்கியது. இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக புதிதாக அமைக்கப்பட்ட கோவில் நுழைவாயிலுக்கும் புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது பத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.