பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிய ஜாய் கிரிசில்டா, தனது வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் இணைந்து புகார் மனுவை சமர்ப்பித்தார்.
இதுகுறித்து ஜாய் கிரிசில்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது :
“எனக்கு தற்போது எந்த மிரட்டலும் வரவில்லை. ஆனால் எனக்கும், என் குழந்தைக்கும் எது நடந்தாலும் அதற்குப் பொறுப்பே மாதம்பட்டி ரங்கராஜ் தான். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். அதனால் முன்கூட்டியே இதை தெரிவிக்கிறேன்,” என்று கூறினார்.
இதேபோல் வழக்கறிஞர் சுதா எம்.பி. தெரிவித்ததாவது:
“ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல் துறையிடம் சென்றாலும் ‘எங்கள் எல்லைக்குள் வரவில்லை’ என்று கூறுகின்றனர். 1.5 மாதங்கள் ஆகியும் விசாரணை தொடங்கப்படாதது வருத்தமளிக்கிறது.
வரும் குழந்தைக்கு நீதியைக் கிடைக்கச் செய்வதே எங்களின் நோக்கம். குழந்தை பிறக்கும் முன் தந்தை யார் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பொதுவாக புகார் அளித்தவுடன் குறித்த நபரை உடனே விசாரிப்பார்கள். ஆனால் இங்கே காவல் துறையினர் விஐபி போல் அணுகுவதாக தெரிகிறது,” என்றார்.
இதற்கு முன்பும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
