தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தினால் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களுக்கும் அக்கட்சியிலிருந்து விலகியவர்களுக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் தவெக-வில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்த்தாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். செங்கோட்டையனின் இந்த விமர்சனத்திற்கு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மிகக் கடுமையான மற்றும் கிண்டலான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றபோது செங்கோட்டையன் எங்களுடன்தான் இருந்தார்; அப்போது அவர் என்ன மாங்காய் பறிக்கவா சென்றிருந்தார்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். அந்தச் சம்பவத்தின்போது அமைச்சரவையில் இருந்த ஒருவரே இப்போது இப்படிப் பேசுவது முறையல்ல என்று சாடிய அவர், “செங்கோட்டையன் இப்போது ஒரு செல்லாக் காசாகிவிட்டார்; அவரைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, அவரை நாங்கள் எப்போதோ மறந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், அதிமுகவின் உறுதித்தன்மை குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, “அதிமுகவில் தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு, அனைத்துச் சுகங்களையும் அனுபவித்துவிட்டு இப்போது மாற்றுக் கட்சிகளுக்குச் செல்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஊர் திருவிழாவில் ஒரு ஆடு காணாமல் போனால் நாங்கள் அதைத் தேடி அலைவதில்லை” என்று செங்கோட்டையனை மறைமுகமாக ஆடுடன் ஒப்பிட்டு விமர்சித்தார். “உடனே நான் செங்கோட்டையனைச் சாடிவிட்டதாகச் செய்தி போடுவீர்கள், அப்புறம் அவரையும் என்னையும் வைத்து ஒரு கார்ட்டூன் வரைந்து போடுவீர்கள், சும்மா விடுங்க சார்” என்று தனது பேட்டியை வழக்கம் போல நகைச்சுவையுடன் முடித்தார். தவெக-வில் இணைந்துள்ள செங்கோட்டையனின் பழைய கருத்துக்களையும், தற்போதைய முரண்பட்ட பேச்சுகளையும் சுட்டிக்காட்டிய செல்லூர் ராஜூவின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.














