இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எதிர்காலத்தில் தாம் இயக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இணைவார் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்தும், லோகேஷ் கனகராஜ் இயக்கியும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தும் வெளியாகிய ‘கூலி’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து திரும்பிய இயக்குனர் லோகேஷ், ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கில் ‘கூலி’ படத்தை ரசித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அவர்,
“‘கூலி’ குறித்து கடந்த 18 மாதங்களாக நான் எதையும் சொல்லவில்லை. மக்கள் அவர்களாகவே யூகித்துக்கொண்டார்கள். ரஜினி–லோகேஷ் கூட்டணி என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளுக்காக கதைகளை எழுதுவதில்லை. ஆனால் நான் எழுதும் கதை அவர்கள் எதிர்பார்ப்புடன் பொருந்தினால் மகிழ்ச்சி, இல்லாவிட்டால் அதை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்.
எதிர்காலத்தில் அனிருத் இசையில்லாமல் நான் எந்தப் படத்தையும் இயக்க மாட்டேன். ஒருவேளை அவர் சினிமாவிலிருந்து விலகினால் மட்டுமே, மற்றொரு இசையமைப்பாளருடன் பணியாற்ற யோசிப்பேன்,” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
 
			














