“நினைத்தது வேறு, நடந்தது வேறு… முழுமையான எபிசோடு இல்லை” – மன்னிப்பு கேட்ட படவா கோபி

நாய்களுக்கு ஆதரவாக நடிகர் படவா கோபி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

சமீபத்தில் நாய் தொல்லை குறித்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படவா கோபி, நாய்களின் குணாதிசயங்களைப் பற்றி பேசியிருந்தார். ஆனால், அவர் கூறியவற்றில் சில பகுதி எடிட் செய்யப்பட்டு முழுமை இல்லாமல் ஒளிபரப்பப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதைப்பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட கோபி,

“மக்கள் பார்த்தது எடிட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. நான் பேசியதை முழுமையாக காட்டவில்லை. இதனால் யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். எனது பேச்சு காரணமாக யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும். நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் தான். ஆனால் நினைத்தது வேறு, நடந்தது வேறு” என தெரிவித்துள்ளார்.

மேலும், நிகழ்ச்சியில் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்றது தனக்குத் தெரியாது என்றும், தன்னிடம் தவறான எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில்

“இரவு 9 மணிக்கு பிறகு புதிதாக வருபவரை தெரிந்து கொள்ள நாய் குறைக்கும். வழக்கமாக வந்து செல்பவர்களை நாய் கடிக்காது”
என அவர் பேசியிருந்தார்.

இதற்கு உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எதிர்ப்பு தெரிவித்து,

“யார் எங்கு செல்ல வேண்டும், எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நாய் முடிவு செய்ய முடியாது”
என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகி வரும் நிலையில், படவா கோபி தனது மன்னிப்பு மூலம் சர்ச்சையை தணிக்க முயற்சி செய்து வருகிறார்.

Exit mobile version