திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் அமைதியாக இருப்பதாக விமர்சித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண்ராஜ் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை விமர்சனத்திற்கு எதிர்வினையாக செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், “அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், இன்று இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்” என்று கருத்து தெரிவித்தார். இது, அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது.
இதற்குப் பதிலடி கொடுத்து பேசிய அண்ணாமலை, “ஒரு சினிமா நடிகருக்காக அரசு பதவியை ராஜினாமா செய்து ஜால்ரா அடிப்பவன் நான் இல்லை. ஜால்ரா அடித்து பதவியில் தொடர வேண்டும் என்றால், அந்தப் பதவியே எனக்கு தேவையில்லை” என்று கடுமையாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன். எந்தக் கட்சியிலும் சேர்ந்ததற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிப்பது எனது அரசியல் இல்லை. நான் நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பேன். ஒரு உன்னதமான கோட்பாட்டுக்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்” என்றார்.
எதிர்காலத்தில் தனக்கு பிரச்சினைகள் வந்தாலும், அது மக்களுக்காக இருக்கும் என்றும், அதனை பெருமையாகவே கருதுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து விளக்கம்
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து பேசிய அண்ணாமலை, “2005ஆம் ஆண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்ட போது மகாத்மா காந்தியின் பெயர் அதில் இடம்பெறவில்லை. 2008ஆம் ஆண்டில்தான் காந்தி பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால், 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ஸ்வச் பாரத் மிஷன் தொடக்கம் முதலே காந்தி பெயருடன் செயல்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.
மேலும், “முன்பு 100 நாட்களாக இருந்த வேலைவாய்ப்பு தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவை மாநில அரசின் சொத்துகளாகவே இருக்கும்” என்றார்.
அதேபோல், “15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், வேலையின்மை பென்ஷன் வழங்கும் விதியும் இதில் உள்ளது. இது கிராம மக்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு” என்றும் அண்ணாமலை விளக்கினார்.
என்டிஏ கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம் இணைவாரா என்ற கேள்விக்கு, “இப்போது அது குறித்து பேசுவது சரியானதாக இருக்காது. உரிய நேரத்தில் பேசுவேன்” என்று பதிலளித்தார்.

















