அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோமீட்டர் நீளத்தில், ரூ.1,781 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என பெயர் சூட்டப்பட்டதை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், “மிகப் பெரிய மேம்பாலத்திற்கு நமது திராவிட மாடல் அரசு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஜி.டி. நாயுடுவின் பெயரை சூட்டியுள்ளார். இதற்காக நான் கோயமுத்தூர்காரன் என்கிற முறையில் பெருமைப்படுகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது :
“தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தது போல், தற்போது ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு படம் எடுத்து வருகிறோம். இதில் ஜி.டி. நாயுடுவாக என் நண்பர் மாதவன் நடிக்கிறார்; நான் இராமையா பிள்ளை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறேன்.
படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், ஜி.டி. நாயுடு பெயரில் பெரிய பாலம் திறக்கப்படுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. படக்குழுவின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த நன்றி,” என சத்யராஜ் தெரிவித்தார்.