தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளரும், ஏவிஎம் ஸ்டூடியோவின் மூத்த நிர்வாகியுமான ஏவிஎம் சரவணன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
1939 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பிறந்த சரவணன், வெறும் 18 வயதிலேயே ஏவிஎம் ஸ்டூடியோவின் பணிகளில் ஈடுபட்டார். ஸ்டூடியோ நிர்வாகம், தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தீவிரமாக செயல்பட்டு, ஏவிஎம் நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.
1958இல் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது திரைப்பயணம், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வழி வகுத்தது. ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘முந்தானை முடிச்சு’, ‘மிஸ்டர் பாரத்’, ‘மனிதன்’, ‘எஜமான்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட பல மிகப்பெரிய ஹிட் படங்களுக்கு அவர் தயாரிப்புத் துணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பணியாற்றிய அவர், தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். ‘முயற்சி திருவினையாக்கும்’, ‘மனதில் நிற்கும் மனிதர்கள்’, ‘ஏவிஎம் 60 சினிமா’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் தொடராக எழுதியதையும் ரசிகர்கள் இன்னமும் நினைவுகூர்கிறார்கள்.
கைகள் கட்டும் பணிவை குழந்தை நிலையிலிருந்தே பின்பற்றி வந்தவர் சரவணன். கோபம் வந்தபோதும் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், ‘மடச் சாம்பிராணி’ என மட்டுமே திட்டியதாக அவர் பேட்டிகளில் கூறியிருந்தார். நேற்று தான் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், இன்று காலமானது திரையுலகினருக்கு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் தற்போது சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
