நல்ல நீர் வழங்கக்கோரி கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையவலம் ஊராட்சியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நல்ல நீர் கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தப்பட்டு உப்பு நீர் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் இங்குள்ள குளத்து நீரையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இக்குளத்தில் உள்ள நீரையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குளத்தில் நீர் இருப்பதால் அந்த நீரை பயன்படுத்துகிறோம். வெயில் காலத்தில் குளம் வற்றிவிட்டால் என்ன செய்வது என இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோதும் முறையான பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டி இன்று பழையவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குடத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வரும்போது நீர் சரியாக வழங்குவதில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அதிகாரிகளிடம் முறையாக குடிநீர் வழங்க அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இதுவரையிலும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமலும், பொது மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பழையவலம் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக நல்ல நீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் முன்பு மறியலில் ஈடுபட போவதாகவும் இப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. செய்தியாளர்களாலேயே திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், சாதாரண பொதுமக்கள் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும் என கேள்வி எழுந்துள்ளது.














