மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தும், மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தி சென்றும் திரளான பக்தர்கள் நூதன முறையில் பிரார்த்தனை.குழந்தைவரம் பெற்றவர்கள் பச்சைஓலையில் குழந்தையை கிடத்தி இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் கஞ்சாநகரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நோய்நொடியின்றி வாழ்வு செழிக்க வேண்டி பக்தர்கள் ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் நூதனமுறையில் வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டான இன்று ஆலயத்தில் நூதன வழிபாடு நடைபெற்றது. நோய் தீர வேண்டியும், திருமணம், குழந்தை வரம் வேண்டியும், மதுபழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி வாழ்வு செழிக்க வேண்டி அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு 500 மீட்டர் தூரம் குளக்கரையில் இருந்து அங்கப் பிரதட்சணம் செய்தும், மண்டியிட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் கோயில் வரை முட்டி போட்டு வந்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்தனர். குழந்தை பேரு பெற்றவர்கள் குழந்தையை பச்சை ஓலையில் கிடத்தி கோயிலை சுற்றி இழுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.
