மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் – 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்

மயிலாடுதுறையில் உணவே மருந்து என்ற தத்தவத்தை உணர்த்திய இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் பேரணியில் உயிர்காற்று தரக்கூடிய மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தி 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு பேரணியின்போது வழிநெடுக வழங்கிய விவசாயிகள் புகழஞ்சலி செலுத்தினர்:-

பாதுகாப்பான உணவு மற்றும் நஞ்சில்லா விவசாயத்திற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 1938ல் பிறந்து 2013ஆம் ஆண்டு மறைந்தவர். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மண்ணும் மனித ஆரோக்கியமும் சீரழிவதைத் தடுக்க, இயற்கை விவசாய முறைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். தமிழகம் முழுவதும் நடைப்பயணங்கள் மேற்கொண்டு, “உணவே மருந்து” என்ற தத்துவத்தை வலியுறுத்தியும் பேரழிவு திட்டங்களுக்கு எதிராகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் 12ஆம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மயிலாடுதுறையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக விவசாயிகள் பேரணி நிணைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் காந்தி சிலையில் இருந்து துவங்கிய பேரணியை டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் துவங்கி வைத்தார். இந்த பேரணியில் சிறுவர்களின் சிலம்பம், மற்றும் பறை இசையோடு சென்ற விவசாயிகள் பொதுமக்களுக்கு உயிர்காற்று தரக்கூடிய மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தி 1000 மரக்கன்றுகளை பேரிடையின் போது பொதுமக்களுக்கு வழி நெடுக வழங்கினர். கிட்டப்பா அங்காடியில் பேரணி முடிவடைந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் உறுதியேற்று புகழஞ்சலி செலுத்தினர். .

Exit mobile version