டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கு உட்பட்ட 123 வார்டுகளுக்கு 30 விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை, விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி தங்களது விளையாட்டுத் திறனை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஸ்டாலின், கூடுதல் ஆட்சியர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version