மயிலாடுதுறை அருகே நவகிரக தோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் செய்து வெள்ளிகவசம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தில் புகழ்வாய்ந்த ஏலா சௌந்தரி அம்பிகா சமேத குண்டலகர்னேஸ்வரசுவாமி கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட கடைசி கோவில் இது என்று வரலாறுகள் கூறுகின்றன.
இக்கோயிலில் தனி சந்நிதியில் உள்ள ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேய சுவாமியை வழிப்பட்டால் நவகிரக தோஷங்களும் நீங்கும், திருமணவரம் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி, ஆடி அமாவாசை தை அமாவாசை மஹாளய அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், பொதுமக்கள் வாழ்வில் சுபிட்சம் பெறவும், விவசாயம் செழிக்கவும் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு இளநீர், சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தும் பூரண வெள்ளிகவசம் கொண்டு வடைமாலை, துளசிமாலை, வெற்றிலை மாலை, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
















