தீபாவளி சிறப்பு வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘பைசன்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குனர் மாரி செல்வராஜ் உரையாற்றியபோது, பல உணர்ச்சி பொங்கிய கருத்துகளை பகிர்ந்தார். அவர் கூறியதாவது :
“பைசன் திரைப்படம் உருவாக மனத்தி கணேசன்தான் காரணம். அவரை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். அவருக்காக போஸ்டர்கள் ஒட்டியவன். அவரின் கதையையே நான் ஒருநாள் படமாக எடுப்பேன் என நினைக்கவே இல்லை. அவரை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்களுக்கு ஒரு கதையை சொல்லப் போகிறேன் என்று சொன்னபோது, முழு நம்பிக்கையுடன் ஒத்துழைத்தவர் அவர்.”
அவர் மேலும் கூறினார் :
“இந்தப் படம் என் அரசியல் பார்வையுடன் கலந்த ஒரு சமூக உரையாடல். பா. ரஞ்சித், என் நண்பர்கள் எல்லாம் பாராட்டினார்கள். ஆனால் மனத்தி கணேசன் அவர்கள் படத்தைப் பார்த்து என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டது தான் எனக்கு மிகப் பெரிய பாராட்டு.”
‘பரியேறும் பெருமாள்’ படத்தை நினைவுகூர்ந்த அவர், “அது பார்த்துவிட்டு ஒரு மழைநாளில் ‘லவ் யூ’ என்று மெசேஜ் அனுப்பினீர்கள் ரஞ்சித் அண்ணா. நீலத்துடன் மீண்டும் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை தள்ளிப் போனது. ஆனால் இப்போது அதை நனவாக்கியிருக்கிறோம்,” என உருக்கமாக கூறினார்.
திருநெல்வேலி குறித்து பேசும்போது, மாரி செல்வராஜ் கூறினார்:
“என் ஊரைச் சார்ந்த இளைஞர்களின் போராட்டங்களையும் கனவுகளையும் பைசன் வழியாக சொல்லியிருக்கிறேன். இது என் ஊருக்காக, தென் தமிழ்நாட்டுக்காக எடுத்த படம். என்னுடைய உச்சபட்ச உணர்ச்சியும் கர்வமும் இதில் வெளிப்பட்டுள்ளது.”
விக்ரம் குறித்து அவர் கூறிய ஒரு உணர்ச்சிப் பகுதி ரசிகர்களை கவர்ந்தது:
“படத்தின் முதல் நாளில் விக்ரம் சார், ‘துருவை உன்னுடைய பையனா நினைச்சுக்கோ மாரி… உன்ன நம்பி விட்டுட்டு போறேன்’ என்றார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன். விக்ரம் சார் நம்பிய மாதிரி துருவும், பைசனும் வெற்றி பெறும்,” எனக் கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
இந்த உரை முழுவதும் ரசிகர்களிடையே பெரும் கைதட்டல்களை பெற்றது. பைசன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.