கடைசி பெஞ்ச் முறையை மாற்றும் வகையில் தமிழக அரசு தொடக்க பள்ளிகளில் ‘ப’வடிவில் இருக்கைகள் அமைக்க அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் கடைசி பெஞ்ச்-சில் அமரும் மாணவர்கள் நன்றாக படிக்க மாட்டார்கள் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் கடைசி பெஞ்சில் அமர பல மாணவர்கள் தயக்கம் காட்டுவார்கள்.
இதை மாற்றும் வகையில் கேரளாவில் வெளியான ‘ஸ்தானர்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படத்தில் ‘ப’வடிவில் பள்ளியில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், கேரள பள்ளிகளில், ப வடிவில் இருக்கை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் ப வடிவில் இருக்கைகள் அமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களை ப வடிவில் அமர வைப்பதன் மூலம், அனைவருக்கும் முன்னுரிமை கிடைக்கும். அத்துடன் மாணவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்வையிடவும், ஆசிரியரை கவனிக்கவும் வசதியாக இருக்கும் என பள்ளிக் கல்வித் துறை கருதுகிறது. எனவே, தொடக்க பள்ளிகளில் இதுபோன்ற இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

















