1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், தனது 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் பல்வேறு வெற்றி படங்களை வழங்கி, “சூப்பர் ஸ்டார்” பட்டத்தை பெற்று வருகிறார். வசூல் மன்னனாகவும், இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோவாகவும் பெருமை பெற்றுள்ளார்.
இந்நிலையில், 50 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த தருணத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் 35 ஆண்டுகள் கழித்து சத்யராஜ் இணைந்து நடித்துள்ளார். மேலும் கிங் நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதே நாளில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான வார் 2 திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. இருப்பினும், கூலி முன்பதிவில் சாதனை படைத்து, வார் 2-ஐ விட முன்னிலையில் உள்ளது.

இந்த சூழலில், இந்திய சினிமாவில் 50 ஆண்டுகால திரை வாழ்க்கையை நிறைவு செய்த ரஜினிகாந்திற்கு, ஹிருத்திக் ரோஷன் சமூக வலைதளமான எக்ஸில் (X) வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,
“ஒரு நடிகராக எனது முதல் அடிகளை உங்கள் பக்கத்தில் இருந்துதான் எடுத்து வைத்தேன். நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர், ரஜினிகாந்த் சார். 50 ஆண்டுகால திரைவாழ்வை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்”என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிருத்திக் ரோஷனின் இந்த வாழ்த்து பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் பெருமிதத்துடன் பதிலளித்து வருகின்றனர்.