ஜெய்ப்பூர்: அக்ராவைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவியின் வயிற்றிலிருந்து 210 செ.மீ நீளமுள்ள முடி குழாய் (Trichobezoar) ஒரு அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்ட சம்பவம், ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது 10-ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமி, கடந்த ஒரு மாதமாக வயிற்றுவலி, வாந்தி, உணவுக் குழப்பம் உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதிப்பட்டு வந்தார். இது தொடர்பாக ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட CECT ஸ்கேன் பரிசோதனையில், வயிற்றிலிருந்து சிறுகுடல் வரை நீண்ட, கடினமான ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவர் ஜீவன் கங்காரியா தலைமையிலான குழுவினர் – டாக்டர் ராஜேந்திர புஙாலியா, தேவேந்திர சைனி, அமித், சுனில் சவுகான் மற்றும் அனஸ்தீசிய நிபுணர்கள் – இணைந்து மேற்கொண்ட இந்த சிகிச்சையில், சிறுமியின் வயிற்றிலிருந்து 210 செ.மீ நீளமுள்ள முடி குழாய் அகற்றப்பட்டது.
மருத்துவர்களின் விளக்கப்படி, இது உலகளவில் அகற்றப்பட்டுள்ள மிக நீளமான Trichobezoar ஆகும். இதற்கு முந்தைய சாதனை 180 செ.மீ. எனக் கூறப்படுகிறது.
விசாரணையில், இந்த மாணவி ஆறாம் வகுப்பில் இருந்தபோது மண், நூல், மரத்துண்டுகள், சாக் போன்ற உணவல்லாத பொருட்களை உண்பதற்கான ஆசை கொண்டிருந்ததாக தெரிய வந்தது. இது ஒரு மனநலக் கோளாறுவாகக் கருதப்படும் ‘பிகா’ (Pica) சிண்ட்ரோம், என்கிறார் மருத்துவர்கள்.
இந்த நிலை, உணவல்லாத பொருட்களை தொடர்ந்து உண்ண தூண்டுவதால், உணவுக்குழாயிலும் வயிற்றிலும் முடிகள் சேர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
சிறுமியின் நிலை தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.