மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (மே 31) இரவு அவரது மதுரை டிவிஎஸ் நகர் இல்லத்தில் நேரில் சந்தித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க. அழகிரி, 2014-ஆம் ஆண்டு உள்கட்சி முரண்பாடுகளால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின், தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார். ஆனால், மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபோது மற்றும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனபோது, அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2023-ல் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றபோது, ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர், குடும்ப உறவுகளில் ஏற்பட்ட பிளவுகள் மெல்லமெல்ல மறைந்துவருவதாகக் கூறப்பட்டது.
இதற்கான முக்கிய அடையாளமாக, திமுகவின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள முன்னோட்டமாக, முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு நேரில் அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். வாசலில் காத்திருந்த அண்ணன் மு.க. அழகிரி, தம்பி ஸ்டாலினை அன்புடன் வரவேற்றார்.

அரசியல் சுவாரசியம்:
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் திமுகவின் மாநில பொதுக் குழுக் கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்திற்கு முந்தைய நாளில் அழகிரியை சந்தித்தது, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, அரசியல் மீள்சேர்க்கை குறித்து எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.