மயிலாடுதுறை மாவட்டத்தில் டித்வா புயல் சின்னம் காரணமாக கடந்த மூன்று தினங்களில் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி கிட்டப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் மாணவ மாணவிகள் வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலைமையை ஏற்பட்டது. நேற்று மழையின் சீற்றம் குறைந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் மீண்டும் திரும்பி சென்றனர். தாமதமாக வந்துள்ள நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.















