மதுரை எஸ்.எஸ். காலனியில் நடைபெற்ற காஞ்சி ஜெயேந்திரர் ஆராதனை விழாவில், இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு ஆன்மீகம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசினார். ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையை நாடு முழுவதும் கொண்டு சென்ற மாபெரும் ஆன்மீகப் புரட்சியாளர் ஜெயேந்திரர் என்றும், சாதி மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் கல்வி மற்றும் மருத்துவ நிலையங்களை உருவாக்கிய அவரது சேவை மகத்தானது என்றும் அவர் புகழாரம் சூட்டினார். இருப்பினும், இன்று தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை அழிக்கும் முயற்சிகள் வெளிப்படையாகவே நடக்கின்றன என்று குற்றம் சாட்டிய அவர், இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குப் பாடம் புகட்ட, இந்துக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து வலுவான ‘இந்து வாக்கு வங்கி’யை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து அரசியல் விமர்சனங்களை முன்வைத்த அர்ஜுன் சம்பத், நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி தமிழ்நாடு தேர்தல் களத்திலேயே இல்லை என்று சாடினார். மனைவியுடனே கூட்டணி சரியாக இல்லாதவர், மக்களுடன் எப்படிச் சரியான கூட்டணி வைக்க முடியும் என்றும், நடிகையுடன் ‘லிவிங் டு கெதர்’ உறவில் இருப்பதை அவரது மனைவியே சுட்டிக்காட்டிய பிறகுதான் அவர் நீதிமன்றம் சென்றார் என்றும் தனிப்பட்ட ரீதியில் விமர்சித்தார். மேலும், தேர்தல் ஆணையம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடியின் மதுரை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வரும் மார்ச் 15-ஆம் தேதி சென்னையில் ‘தமிழ், தமிழர், தமிழகம் மீட்பு மாநாடு’ பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார். ‘அனுஷ்டத்தின் அனுக்கிரகம்’ நிறுவனரான நெல்லை பாலு ஒருங்கிணைத்த இந்த விழாவில், திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
