மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை:- அறுவடைக்கு தயாராகி வரும் மற்றும் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள விவசாயிகள் கலக்கம்:-
தெற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதன் காரணமாக தமிழகத்தில் நேற்றுமுதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடலோர டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது.
நேற்று மாவட்டம் முழுவதும் 9.48 மி.மீட்டர் மழை பெய்த நிலையில், மயிலாடுதுறை தாலுகாவில் மட்டும் 39 மி.மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில், இன்றுகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை தொடங்கி பெய்து வருகிறது.
மயிலாடுதுறை நகர், எலந்தங்குடி, வழுவூர், மங்கைநல்லூர், கோமல், பாலையூர், ஸ்ரீகண்டபுரம், குத்தாலம், நீடூர், ஆறுபாதி, மணல்மேடு, செம்பனார்கோவில், ஆக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது. இதன் காரணமாக, குறுவை அறுவடைக்கு தயாராகி வரும் விவசாயிகளும், அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள விவசாயிகளும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
