மாரி செல்வராஜை கைது செய்ய கோரி ஹரி நாடார் கட்சி போராட்டம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தாரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டி, அவரை கைது செய்யக் கோரி ஹரி நாடாரின் ‘சத்திரிய சான்றோர் படை’ கட்சி சார்பில் ஆலங்குளத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 5 முதல் 6 பேர் வரை கலந்து கொண்டனர். அப்போது கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்ஸ் நாடார் பேசியபோது, “இயக்குனர் மாரி செல்வராஜ் தொடர்ந்து ஜாதி மோதலை தூண்டும் விதமாக திரைப்படங்களை இயக்கி வருகிறார். ‘பைசன்’ படமும் தென் மாவட்டங்களில் அமைதியாக இருக்கும் சூழலை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்தார்.

மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், பா. ரஞ்சித் தயாரித்த நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன.

திரைப்படம் சமூக அரசியல் பின்னணியுடனும், தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், காதல் மற்றும் கபடி விளையாட்டை மையப்படுத்தியும் அமைந்துள்ளது. துருவ், கபடி மீது ஆர்வமுள்ள இளைஞராக நடித்துள்ளார். கதை இந்தியா–பாகிஸ்தான் கபடி போட்டியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறி, சத்திரிய சான்றோர் படை ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்தக் கட்சியின் தலைவர் ஹரி நாடார் ஆவார். அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அப்போது அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பூங்கொதை ஆலடி அருணா 70,614 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.

அந்தத் தேர்தலில் ஹரி நாடார், ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்டு 37,727 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். நாடார் சமூகத்தின் வாக்குகள் ஆலங்குளம் தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கின்றன.

Exit mobile version